
சேலம் கிச்சிப்பாளையம் ராஜா பிள்ளை தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகன் குமார் என்கிற சிவக்குமார் (40). கடந்த மே மாதம், உடையாப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கந்தாஸ்ரமம் பகுதிக்குக் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவு செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் குமாரை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ராஜி மகன் பெருமாள் (44), தேக்கம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த புகாரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்களில் குமார் மீது காரிப்பட்டி, கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
குமார், பெருமாள் ஆகியோரின் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் செவ்வாயன்று (ஜூன் 23) உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் பாலியல் குற்றவாளி என்ற பிரிவில் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருமாள், குமார் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.