தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31- ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் கந்தம்பட்டியில், 33 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத் திறப்பு விழா சேலத்தில், புதன்கிழமை (ஜூலை 15) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலைமைக்கேற்ப, அந்தந்த வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கடன் கொடுக்கக் கூடாது. கூட்டுறவு வங்கிகளில் உள்ள முழுத்தொகையையும் கடனாகக் கொடுத்துவிட்டால், டெபாசிட் செய்துள்ளவர்கள் திருப்பிக் கேட்கும்போது வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
ஒட்டுமொத்த மக்களும் கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இது ஒரு புதிய வைரஸ் நோய். இது ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு எளிதாய்ப் பரவக்கூடியது. ஆகவே, மக்கள் சுயக் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கிற வழிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றினால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.
நேற்று (15/07/2020) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் நம்முடைய கோரிக்கையை வைத்திருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பங்கீட்டு நீர் நமக்குக் கிடைக்கும்.
ஊரடங்கு உத்தரவு ஜூலை 31- ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை இப்போதே சொல்ல முடியாது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் வேறு பல மாநில அரசுகளும் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதைப் பொருத்துதான் நாமும் முடிவு எடுக்க முடியும். நோய்ப் பரவல் குறைந்தால் தான் நாம் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏற்கனவே மண்டல வாரியாக பேருந்து சேவைகள் கொண்டு வந்தோம். அப்படிப் பேருந்துகளை விடும்போது மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து செல்வதால் யார் மூலமாக நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டிருந்தார். அப்போது உயர்நீதிமன்றம், உபரிநீரை என்ன செய்வீர்கள் என்றும், அதற்கு அரசு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா என்றும் கேட்டது. அதற்குப் பிறகுதான் பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீரை ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியும், உபரிநீரை லிப்ட் இர்ரிகேஷன் மூலமாக வறண்ட ஏரிகளில் நிரப்பவும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.
அணையில் நிரம்பி வழியும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். உபரி நீரைத்தான் நாங்கள் எடுக்கிறோம். மேட்டூர் அணை நிரம்பி பாசனத்திற்கு போக உபரி நீர் கடலில் கலந்தது. அதுபோன்ற காலக்கட்டத்தில் தான், நாம் அந்த நீரை எடுத்து நம்முடைய பகுதிகளில் இருக்கிற ஏரிகளில் நிரப்புகிறோம். இதனால் டெல்டா பாசனத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. உபரி நீர் யாருக்கும் பயனில்லாமல் கடலில் கலக்கிறது. அப்படிக் கடலில் கலக்கிற நீரை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்று உயர்நீதிமன்றம் கேட்டதால்தான், உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கரோனா தொற்றுக்கு எல்லா இடங்களிலும் பரிசோதனை செய்வது கிடையாது. பி.பி.இ. கிட் அணிந்து கொண்டுதான் கரோனா பரிசோதனை செய்ய முடியும். எல்லா ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் கரோனா பரிசோதனை செய்வது கிடையாது.
நோய்த்தொற்று பரிசோதனைக்கென்று குறிப்பிட்ட மருத்துவமனைகளை வைத்திருக்கிறோம். இந்த மருத்துவமனைகளில், நோய் அறிகுறி தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டு, உடனே மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சைகளை அளிக்கின்றோம்.
எல்லா ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்வதால் எல்லாருக்கும் நோய்ப் பரவி விடும். இது ஒரு புதிய நோய். இந்த நோய்க்குத் தக்கவாறு உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஐ.சி.எம்.ஆர். ஆகிவற்றின் வழிமுறைகளைப் பின்பற்றிதான் நாம் சிகிச்சை அளிக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். தேவைக்கேற்ப படுக்கைவசதிகள் அதிகப்படுத்தப்படும்.
சேலத்தில் அரசு மருத்துவமனையில் கோவிட் கேர் மையத்தில் மட்டும் 1,500 படுக்கைகள் உள்ளன. அவற்றுடன் மொத்தம் 3,000 படுக்கை வசதிகள் உள்ளன. கல்லூரிகள் உள்ளிட்ட வேறு எங்கெங்கு இடங்கள் உள்ளதோ அங்கெல்லாம்கூட படுக்கை வசதிகள் செய்து கொடுக்க முடியும்.
எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பி.பி.இ. கிட் அணிந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய்ப் பரவல் ஏற்பட்டுவிடும். அப்படிச் சரியான முறையில் அணுகாததால்தான் நிறைய மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.