சேலம் அருகே, மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தியதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவல் அபாயத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்கள், மது பிரியர்கள் கள்ளச்சாராயம் உள்ளிட்ட மாற்று வழிகளில் மதுவை நாடத் தொடங்கி உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மாமாஞ்சி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தபோது, பாக்கெட் சாராயம் இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் வீரபாண்டி அருகே உள்ள ராக்கிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (39), குமார் (47), எட்டிமாணிக்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் (47), ரெட்டியூரைச் சேர்ந்த இளவன் (39) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களில் கிருஷ்ணனும், சண்முகமும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்பதும், இளவன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. கைதான நான்கு பேரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள், தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலனூர் பகுதியில் இருந்து கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி வருவதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.