சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்கள் வருகின்றன. இந்த நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 1,050 தூய்மைப் பணியாளர்களும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் 1,500 தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு மண்டலங்களிலும் தினசரி 500 டன் குப்பைகள் சேரும். இந்தக் குப்பைகளை சுத்தப்படுத்துவதுடன் கழிவு நீர்க்கால்வாய் அடைப்புகளையும் அந்தத் தொழிலாளர்கள்தான் சரி செய்ய வேண்டும். ஒருநாள் குப்பைகளை அள்ளவில்லை என்றால், ஒட்டுமொத்த சேலமே நாறிவிடும்.
அப்படிப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குத்தான் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இரு மண்டலங்களிலும் மூன்று மாதமாக சம்பளம் தரவில்லையாம். இதற்கு முன்பும்கூட மாதம் பொறந்தா எந்தத் தேதியில் சம்பளம் கொடுப்பார்கள் என தொழிலாளர்களுக்கே தெரியாதாம். இப்படியே ஒருமாத சம்பளத்தைப் பெண்டிங் வைக்கப்போக... அது இப்போது மூன்று மாதமாகிவிட்டதாம். இதனால் கொதிப்பான தூய்மைப் பணியாளர்கள், மாநகரை சுத்தப்படுத்துவதை நிறுத்திவிட்டு, கடந்த 08-ஆம் தேதி சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசினார் சேலம் மாவட்ட நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜீவானந்தம், “மூணுமாச சம்பளப் பிரச்சனை மட்டுமல்ல, கடந்த அஞ்சு வருசமா தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். பணத்தையும் கட்டவில்லை நிர்வாகம். அதேபோல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிய தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் கட்டாததால் வட்டி, அபராத வட்டி என நொந்து சாகிறார்கள். இந்த முறைகேடுகளையும் சரி செய்யாவிட்டால், நான்கு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளமாட்டோம்'' என்றார் கொதிப்புடன்.