சேலம் மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளைக் கொத்து கொத்தாகக் கைது செய்யும் நடவடிக்கையில் மாநகர காவல்துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காவல்நிலையங்களில் ‘ஹிஸ்டரி ஷீட்’ பின்னணி கொண்ட ரவுடிகளை அவ்வப்போது கைது செய்வதுடன், அவர்கள் மீது தடுப்புக்காவல் (குண்டாஸ்) சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுவதில்லை.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரவுடிகளின் கொட்டமும் கடந்த ஒன்றரை மாதமாகக் கட்டுக்குள் இருந்தது. காவல்துறையினரும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டனர். ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து காவல்துறையினரும் அன்றாட அலுவல்கள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கைக்குத் திரும்பியுள்ள காவல்துறையினர், தற்போது ரவுடிகளைத் தேடித்தேடி கொத்து கொத்தாக அள்ளி வருவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
இதில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் சேலம் மாநகரில் ஸ்டார்மிங் ஆபரேஷனுக்கு மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த அதிரடிச் சோதனையில், மாநகரம் முழுவதும் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகத்தின்பேரில் சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவுகள் 109, 110 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். ஓராண்டு வரை எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டோம் என உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த உறுதிமொழியை மீறி செயல்படுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இவர்கள் தவிர, சந்துக்கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். சாலை விதிகளை மீறியதாக 1,629 பேர் மீது மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.