சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதும் தனி கவனம் செலுத்தும் வகையில் அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முகக்கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள், கிருமி நாசினி திரவம் ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பொருள்களை ஒருமுறை பயன்படுத்திய பிறகு, தண்ணீரில் சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
![SALEM](http://image.nakkheeran.in/cdn/farfuture/29gdTfchyeh16jn8rVu3PlE888iOG1PQkYjlPDjSDXI/1587915749/sites/default/files/inline-images/matru.jpeg)
சேலம் மாவட்டத்தில் 175 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்சொன்ன உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. சாமிநாதபுரத்தில், தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் நேரடியாக இப்பொருள்களை சனிக்கிழமை (ஏப். 25) வழங்கி, துவக்கி வைத்தார்.
மேலும், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கிருமி நாசினி திரவம், முகக்கவசங்கள், காட்டன் ரோல்கள், டிஸ்யூ பேப்பர்கள் அடங்கி தொகுப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தொகுப்பு, மொத்தம் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.