தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தத் தந்தை சந்திரசேகர், தாய் சோபனா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் 'விஜய் மக்கள் இயக்கம்' கலைக்கப்பட்டுவிட்டதாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த பதில் மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைக்கவிருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், எனவே விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் அக்.29 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் நடிகர் விஜயின் புகைப்படத்தை அரசியல் கட்சித்தலைவர்களுடன் சேர்த்து போஸ்டர் ஒட்டக்கூடாது. அதேபோல் போஸ்டரில் ஆர்வக்கோளாறு கொண்ட வசனங்களை இடம்பெறச் செய்யக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.