Published on 17/07/2018 | Edited on 17/07/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/gPFASgJcNrXF9QQzIxxsw_Ew30_sJ2FvznT0gdRSC3U/1533347632/sites/default/files/inline-images/Rape1.jpg)
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்களில் கற்றுத்தரப்படும் தியானம் பற்றி ஆய்வு செய்வதற்காக ரஷ்ய நாட்டை சேர்ந்த அலீனா (22) என்ற இளம் பெண் திருவண்ணாமலைக்கு கடந்த 12ஆம் தேதி வந்துள்ளார்.
அவர் தி.மலையில் உள்ள விசிறி சாமியார் ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை விடுதி ஊழியர்கள் அலீனாவை மயங்கிய நிலையில் ரகசியமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
அப்போது, மயக்க நிலையில் இருந்த அலீனா, கற்பழிக்கப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை அலீனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, அலீனாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.
இதன்பின், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் ஆக, நேற்று இரவு 9 மணி அளவில் காவல்துறை விசாணையை தொடங்கியது. அந்த விசாரணையில் சந்தேகத்தின் பேரில், அலீனா தங்கியிருந்த விடுதியில் பணிபுரியும் இளைஞர்கள், அலீனாவுக்கு வாடகை கார் ஓட்டும் இளைஞர் மற்றும் அலீனாவின் நண்பர் ஒருவர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்ய பெண் அலீனா மயக்கம் தெளிந்த பின்னரே என்ன நடந்தது? கற்பழிப்புக்கு யார் காரணம் என்கிற விவரம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆன்மீக சுற்றுலாத்தளமாக பிரபலமடைந்த திருவண்ணாமலையில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருகைதந்து வருகின்றனர். அப்படி இங்கு வரும் வெளிநாட்டினர், மாத கணக்கில் இங்கேயே தங்கி, தியானம் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் சாதுக்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். அப்படி உள்ள நிலையில், வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் அவர் தங்கியிருந்த விடுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்படிருப்பது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுரவு துறையும் விசாரணை நடத்தி வருகிறது.