முரசொலி பவளவிழா நிகழ்ச்சி முன்னேற்பாடுகள்
சிறப்புற நடைபெற்று வருகின்றன:மு.க.ஸ்டாலின் பேட்டி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (03-08-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
’’முரசொலியின் 75ம் ஆண்டு பவளவிழா நிகழ்ச்சி வருகின்ற 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. பவளவழாவை முன்னிட்டு, 10ம் தேதி காலை 10 மணிக்கு, முரசொலி வளாகத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில், ‘இந்து’ என்.ராம் ‘முரசொலிக் கண்காட்சி அரங்கம்’ திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னின்று மேற்கொண்டுள்ளார்.
அன்று மாலை கலைவாணர் அரங்கில் ‘பவளவிழா வாழ்த்தரங்கம்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பத்திரிகை உலகைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலை உலகத்தினரும் பங்கேற்கவிருக்கிறார்கள். கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ முன்னின்று கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மறுநாள் 11ம் தேதியன்று மாலை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தோழமைக் கட்சிகளை சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் மாபெரும் ‘பவளவிழாப் பொதுக்கூட்டம்’ நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு , ’முரசொலி பவளவிழா மலர்’ வெளியிட இருக்கிறார். முதல் மலரை, முரசொலியின் முதல் மேலாளராக பணியாற்றிய மதிப்பிற்குரிய தட்சிணாமூர்த்தி பெறவிருக்கிறார்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ முன்னின்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’’