கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர், கடந்த மாதம் டெண்டர் கோரி, அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது கரோனா ஊரடங்கு காலம் என்பதால், ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாதநிலை இருக்கிறது. அதனால், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் நடவடிக்கைகள், சிலருக்கு ஆதாயம் அமையும் வகையில் உள்ளதால், 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மின்னணு முறையில் டெண்டர் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.