சமீப காலமாக கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசும் கைது செய்து வருகிறது. ஆனால் இந்த கத்தி கேக் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்பது போலீஸ் மீதான பயம் குறைந்து உள்ளதே என்பதையே காட்டுகிறது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கின்ற மணிகண்டன். மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் இன்று அதிகாலை நேரத்தில் கரூர் - திருச்சி சாலையில் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். கேக் வெட்டுவதற்கு பெரிய பட்டா கத்தி போன்று ஒரு கத்தியை பயன்படுத்தி கேக் வெட்டி உள்ளார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உஷாரான பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.