சேலம் அழகாபுரம் இ.பி. காலனியைச் சேர்ந்த உதயகுமார் மகன் பூபதி (33). இவர், மெய்யனூரைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் வீட்டு மனைகள் கிரயம் செய்வதாகக்கூறி 40 லட்சத்தை பெற்றார். ஆனால், கிரயம் செய்யாமல் மோசடி செய்ததாக அவர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் வீட்டு மனை கிரயம் செய்வதாகக்கூறி 25 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அந்தப்பெண்ணை அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார்களின்பேரில் அவரை கைது செய்ய சென்றபோது காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பிச்சென்றார். இந்த குற்றத்திற்காக அவர் மீது அழகாபுரம் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை அழகாபுரம் காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், மீண்டும் ஒரு பெண்ணிடம் வீட்டுக்குள் புகுந்து அவரை கொல்ல முயன்றார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், பூபதியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது ஆனையை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூபதியிடம் இன்று (செப். 21) நேரில் சார்வு செய்யப்பட்டது.