தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கன மழையால் நாகை பகுதியில் 500 க்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துவருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகிக் கடந்த இரண்டு மாதங்களாகவே தினசரி மழை கொட்டித் தீர்த்தது. அந்த நீர்வடிவதற்குள் வடகிழக்கு பருவமழையும் துவங்கி, இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.
நாகப்பட்டினம் அடுத்துள்ள கீழ்வேளூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் பரப்பிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கருங்கண்ணி, கர்ணாவெளி, ஆளக்ககரை, வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அந்தப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகிவிட்டது. இதற்குக் காரணம் இந்தப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாமல் போனதன் விளைவே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளது. பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.