பொங்கல் பண்டிகையையொட்டி 'ஜல்லிக்கட்டு' மற்றும் 'எருதுவிடும் விழா' ஆகியவற்றுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. கிருஷ்ணகிரியில் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள நேரலகிரி என்ற கிராமத்தில் காலை 6 மணியில் இருந்து எருதுவிடும் விழா நடைபெற்று வந்தது. அப்போது எருதுவிடும் விழாவை கண்டு ரசிப்பதற்காக வந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வீட்டு மாடியில் இருந்து இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்படி புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டின் மேற்கூரையில் இருந்து பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் எருது விடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரர்களும் அந்த இடிபாடுகளில் சிக்கினர். எதிர்பாராது நிகழ்ந்த இந்த விபத்தில் மேகாஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும், பாலமுரளி என்ற 68 வயது முதியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எருது விடும் விழாவில் மேற்கூரை இடிந்து விழுந்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.