சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் செய்யும் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த மூன்று நாட்களாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஏடிஎம் கொள்ளைக்குப் பெயர்போன மேவாட் கொள்ளையர்களால் நிகழ்ந்ததுள்ளது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற இந்தக் கொள்ளை தொடர்பாக 16 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முறையாக ஆவணங்கள் கொடுக்கப்பட்ட 7 புகார்களின் அடிப்படையில் 33 லட்சம் ரூபாய் என மொத்தம் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 22.06.2021 அன்று 2 தனிப்படை ஹரியானா சென்று இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று தேசியக் கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 23ஆம் தேதி காலை சென்னை தி.நகர் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் சென்ற போலீசார், ஹரியானா மாநிலத்தில் உள்ள அமீர் ஆர்ஷ் என்ற கொள்ளையனைக் கைது செய்தனர்.
அமீருடன் ஹரியானாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த போலீசார் அவனை சென்னை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பிறகு, அண்ணாநகரில் உள்ள பூவிருந்தவல்லி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை சிறையில் அமீர் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் பணம் திருடிய கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையன் அமீரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூவிருந்தவல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.