சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுன்டரில் திருடிவிட்டு ஊழியர் கொள்ளை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் என்பவரை கட்டிப் போட்டுவிட்டு ரூ.1.32 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையில், துப்பாக்கி முனையில் சில நபர்கள் தன்னை கட்டிப் போட்டுவிட்டு கவுன்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.32 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றதாக டீக்காராம் தெரிவித்திருந்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராக்களும் இல்லாத நிலையில், ரயில் நிலையத்தின் அருகில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்யக்கூடிய பணியில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்கு சந்தேகத்திற்கு விதமான நிலையில் பெண் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என்பது தெரியவந்தது.
அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதியைப் பிடித்து விசாரித்த பொழுது, டிக்கெட் கவுன்டரிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு திருடர்கள் பணத்தைத் திருடிச் சென்றதாக நாடகமாடியது அம்பலமானது. திட்டம்போட்டு திருடிவிட்டு நாடகமாடிய தம்பதிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சம்பவத்தன்று பணத்தை டீக்காராமே கொள்ளையடித்துவிட்டு தனது மனைவி சரஸ்வதியை வரவழைத்து கையையும், வாயையும் கட்டிபோட்டுவிட்டு கவுன்டர் அறையை வெளிப்பக்கமாக மூடியது தெரியவந்தது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் டீக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து பணத்தை இழந்துவந்த நிலையில், தொடர்ந்து கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வசூலான டிக்கெட் பணத்தை மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு இறுதியில் வசமாகச் சிக்கிய சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.