சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது குழிப்பட்டி எனும் மலைவாழ் கிராமம். இந்த கிராமத்திற்கு சரியான சாலை வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் தேவைகளுக்காக வெளியே வருவதற்கு அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வந்தனர். அவசர தேவைக்காக வெளியே செல்லவேண்டும் என்றால் மூங்கில் குச்சிகள், கயிறுகள் உதவியுடன் தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சரண்யா என்ற நான்கு மாத கர்ப்பிணி பெண்ணை மூங்கில் கம்பு மற்றும் துணியைப் பயன்படுத்தி தொட்டில் கட்டி அதன் மூலம் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூக்கிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில் தமிழக அரசு விரைவில் சாலை அமைத்துத் தர வேண்டும் என்பதுதான் குழிப்பட்டி மலைவாழ் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.