கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,"ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லும் முன் நமது பொருளாதாரத்தை அழித்தார்கள். நமக்கு ஆதாரமாக விவசாயம் மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலம் விவசாய உற்பத்தியை நம்பி இருந்தது. 1800ம் ஆண்டு வாக்கில் ஒரு ஹெக்டருக்கு 7 மெட்ரிக் டன் அளவிற்கு நாம் நெல் உற்பத்தி செய்தோம். இப்போது டெல்டா மாவட்டங்களில் 6 மெட்ரிக் டன் அளவிற்கே தற்போது நெல் உற்பத்தி செய்கிறோம். 200 வருட காலனி ஆதிக்கத்தில் நமது விவசாயத்தை அழித்தார்கள். விவசாயப் புரட்சியின் விளைவாக இப்போது தரமான உணவுகள் கிடைக்கின்றன. இது விவசாயி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் செய்த அதிசயமாகும்.
கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க ஏதேனும் முறை இருக்கிறதா என தெரிந்து கொள்ள விரும்பியுள்ளனர். இது குறித்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் அதிகாரத்தை மாற்ற என்ன நடைமுறை என ஆங்கிலேயர்கள் கேட்டனர். நேரு இது குறித்து ராஜாஜியிடம் கேட்டார். ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். அதன் மூலம் சென்னையில் புதிய செங்கோல் தயாரிக்கப்பட்டு, மவுண்ட்பேட்டனிடம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருஞானசம்பந்தரின் தேவாரம் பாடி அப்போதைய பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த வழக்கத்தை நாம் எப்படியோ மறந்துவிட்டோம். தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளது" என தெரிவித்தார்.