Skip to main content

தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொப்பறை விலை வீழ்ச்சியாக உள்ளதால் தேங்காய் விலையும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் கவலையடைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் கீரமங்கலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, சேந்தன்குடி, நகரம், மேற்பனைக்காடு நெய்வத்தளி, வேம்பங்குடி மற்றும் சுற்றவட்டார கிராமங்களிலும் அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, குருவிக்கரம்பை, தென்னங்குடி, செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம் மற்றும் பல கிராமங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே போல தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களிலும் தேங்காய் உற்பத்தியே அதிகம். இப்பகுதிகளில் உற்பத்தி ஆகும் தேங்காய்கள் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய்களாக மட்டுமின்றி கொப்பரைகளாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மட்டுமின்றி தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளும் பலனடைந்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக கொப்பரை விலை தொடந்து சரிவை சந்தித்து வருவதால் தேங்காயின் விலையும் குறைந்து விவசாயிகளை கவலைப்பட வைத்திருந்தது. அதாவது கடந்த சில மாதங்களாக கொப்பரை ஒரு கிலோ ரூ. 80 வரை மட்டுமே விற்பனை ஆனாது. அதனால் தேங்காய் விலையும் குறைவாக விற்பனை ஆனது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தேங்காயின் விலை ஏறத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை தேங்காய் விலை ரூ. 10, 12 வரை விற்பனை ஆன நிலையில் இந்த மாதம் தொடக்கம் முதல் படிப்படியாக விலை ஏறி தற்போது ஒரு தேங்காயில் விலை ரூ. 19 முதல் 20 வரை விற்பனை ஆகிறது. மொத்த வியாபாரிகளும் ரூ. 17 வரை விவசாயிகளுக்கு கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் கீரமங்கலம் சுற்றுவட்டார தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் விலை ஏற்றம் உள்ள நேரத்தில் உற்பத்தி குறைவாக வருகிறது என்றும் தேங்காய் விலை ஏற்றம் போல கொப்பரை விலை ஏறவில்லை என்றும் கூறுகின்றனர்.

பகத்சிங்

சார்ந்த செய்திகள்