கோவை காந்திபுரம் பகுதியில் சோடா கடை நடத்தி வந்தார் பிஜூ. அதே பகுதியில் செல்ஃபோன் கடை நடத்தி வந்த ஆறுமுகம் என்பவருக்கும், பிஜூவிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆறுமுகத்தின் மகன் நிதிஷ்குமாருக்கும், ஆனந்த் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், ஆனந்தின் நண்பர்கள் ராகுல், விஷ்ணு ஆகியோர் நிதிஷ்குமாரை கத்தியால் வயிற்றில் குத்தினர்.
இது தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு பிஜூ தான் காரணமென கருதிய ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் 7 பேர் இன்று பிஜூவை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பிஜூ கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் ஆழமாக வெட்டு விழுந்துள்ளதால், இதயத்திற்குச் செல்லக்கூடிய இரத்த குழாய்கள் பாதிப்படைந்தது. இதனால், சிகிச்சைப் பலனின்றி பிஜூ உயிரிழந்தார். இதுதொடர்பாக காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அந்தக் கும்பல் பிஜூவை துரத்திச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர் காவல் துறையினர்.