





இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசுக்கு சொந்தமான உப்பு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து இன்று தூத்துக்குடி இராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வாலிநோக்கம் விளக்கில் சாலை மறியலில் ஈடுபட சென்ற சிஐடியூ தொழில் சங்கத்தினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதுபற்றி சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி கூறியதாவது, இந்த உப்பளத்தை சுற்றி உள்ள கிராமங்களான முந்தல், மாரியூர், வாலிநோக்கம், ஏர்வாடி போன்ற பகுதிகளிலிருந்து தினக்கூலிகளாக ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பாக சம்பளம் சரியாக வழங்கப்படாமல் உள்ளது. மேலும் உப்பளம் லாபகரமாக இயங்கியது, தற்போது அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் உப்பளத்தை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளனர். இதனால் இந்த உப்பளத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
மேலும் இந்த உப்பளத்தை சரியாக இயக்கினால் மாதத்திற்க்கு ஒருகோடி ரூபாய் லாபம் கிடைக்கும். உப்பளத்தில் உள்ள நிர்வாக மேலாண்மை இயக்குநரின் தவறான அணுகுமுறையால் தற்சமயம், நஷ்டத்தில் இயங்குவதாகவே கணக்கு காட்டுகின்றனர் என்றார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், தொழிலாளர்கள் பிரச்சனையை நான் நன்கு அறிவேன். நான் கூலி தொழிலர் குடும்பத்திலிருந்து வந்தவன் தான். இதுபற்றி சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியும் எந்தயொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது இந்த அரசு, இது வேதனை அளிக்கிறது. உங்களுடைய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். நான் எப்பொழுதும் உங்களுடன் தான் இருப்பேன் என்றார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர். சாலை மறியலையடுத்து கீழக்கரை மற்றும் முதுகுளத்தூர் டிஎஸ்பி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.