Skip to main content

'ஸ்மார்ட் சிட்டி'யால் பறிபோகும் வசிப்பிடம்...! - பரிதவிக்கும் ஈரோடு ஓடைக்கரை மக்கள்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

 Residence that will be eroded by the Smart City ...!

 

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ரூபாய் 70 கோடி மதிப்பில் ஓடைகளில் கான்கிரீட் தளங்கள் அமைத்து நடைபாதை, பூங்கா போன்று அழகுபடுத்துதல் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளது.

 

இதற்காக, ஓடையின் கரையில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளைக் குடியிருப்பவர்களே அகற்றிக்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற சிலர் தாங்களாகவே முன்வந்து வீடுகளை அகற்றிக்கொண்டனர். சில வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த நிலையில், 11-ஆம் தேதி ஈரோடு மரப்பாலம் அருகே பெரும் பள்ளம் ஓடைக் கரையில் இருந்த 84 வீடுகளை அகற்ற, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகவடிவு தலைமையில் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் வந்தனர்.

 

இரு கரைகளில், வலதுபுறம் உள்ள கரையில் இருந்த 5 வீடுகளை இடித்து அகற்றினர். அந்த வீடுகளைச் சேர்ந்த பெண்கள், அதிகாரிகளின் கால்களில் விழுந்து கதறி அழுதனர். தங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தங்களது பொருட்களை எடுத்துக் கொள்ள அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதிகாரிகள், அந்த ஐந்து வீடுகளையும் இடித்து அகற்றினார்கள். அந்த வீடுகளைச் சேர்ந்த பெண்கள் இதைப் பார்த்துக் கதறி அழுதனர். அதே போன்று இடது கரையில் உள்ள 10 வீடுகளை இடிக்க அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அதில் வசிக்கும் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் எனக் குடும்பத்துடன் ஜே.சி.பி இயந்திரம் முன்பு அமர்ந்து கொண்டனர். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு அவகாசம் வழங்கிய அதிகாரிகள், அங்கிருந்து சென்றனர். இதனால், அந்தப்பகுதி பரபரப்பானது.

 

நகரை அழகுபடுத்துகிறோம், உலக வங்கி பணம் தருகிறது என்று 800 கோடி ரூபாய் செலவில், ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கிறது. இதில் ஐம்பது, அறுபது ஆண்டுகளாக ஓடைக்கரையில் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து, பிறகு ஓட்டு வீடு அல்லது கான்கிரீட் வீடுகளாக அமைத்து, அதில் வசித்து வரும் அப்பாவி ஏழை மக்களை அதுவும், ஈரோடு நகரத்தையொட்டி கூலி வேலை செய்து பிழைக்கும் அவர்களை, பல ஆண்டுக் காலம் குடியிருந்த மண்ணிலிருந்து அகற்றி, அவர்கள் குடியிருப்பதற்காக இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கை காட்டுகிறது அரசு நிர்வாகம்.

 

ஓடைக்கரையிலாவது இதுவரை வசிக்க இடமிருந்தது இனிமேல் எங்கு வசிப்போம்? என்ன தொழில் செய்வோம்? எங்கு கூலி வேலைக்குப் போவோம்? எப்படி வாழ்வது என வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பது, பரிதாபமாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்