டெங்கு நிவாரணம் கோரிய வழக்கு - மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!
டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள் இதுதொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாளொன்றுக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தவறிவிட்டது. எனவே, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை, டெங்கு பரவாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கை மற்றும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகளின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.