கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர், அரங்கூர், பட்டூர், கீழக்கல்பூண்டி ஆகிய பகுதிகளில் நிவர் மற்றும் புரவி புயலில் பாதிக்கப்பட்ட சோளம், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸிடம், பேருந்து நிலையத்தில் யாராவது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தால் வண்டிகளையும் பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டிகள் வராத அளவில் வேலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம், தள்ளு வண்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
அதேபோல் வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரையூர், கண்டப்பங்குறிசி, அரசங்குடிம் நந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோளம், பருத்தி, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரம் எக்டேர் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்” என்று கூறினார்.