அரபிக் கடலில் உருவாகிய 'டவ்தே' புயல் கடந்த 15 ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. இந்த புயல் கர்நாடகா, கோவா, மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைக் கடுமையாகத் தாக்கி, உயிரிழப்புகளையும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. குஜராத்தில் மட்டும் 45 பேர் வரை இந்தப் புயலுக்குப் பலியாகியுள்ளனர். மேலும், மற்ற மாநிலங்களைவிட மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களும் பெரும் சேதங்களைச் சந்தித்தன.
'டவ்தே' புயல் காரணாமாக தமிழகத்தில் நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் மா, வாழை உள்ளிட்ட பல மரங்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூங்கிலடி செல்லும் தரைப்பாலமும் மழை காரணமாக முற்றிலும் உடைந்தது. அதேபோல் இந்த புயலின்போது கடலுக்குச் சென்றிருந்த 21 தமிழாக்க மீனவர்களும் காணாமல் போயினர்.
இந்நிலையில் தமிழகத்தில் 'டவுதே' புயலால் காணாமல்போன 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மே 15 முதல் இதுவரை 21 மீனவர்களைத் தேடியும் கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர், மீனவர் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு வாரிசுதாரர்களுக்கு இந்த நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.