Skip to main content

துபாயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்பு

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

Relief to families of Dubai victims; Chief Minister's announcement

 

துபாயில் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் கடந்த 15 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் உடனடியாக வந்து கட்டடத்தில் இருந்தவர்களை வெளியேற்றினர். தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பயங்கர தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துபாயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் இமாம் காசீம் (வயது 43) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சலியாகுண்டு என்பவரது மகன் குடு (எ) முகமது ரபிக் (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்