கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எஸ்.பி. பகலவன் எடுத்து வருகிறார். கல்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கள்ளச்சாராயம் கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்ட பகுதிகளுக்கு கடத்தப்படுவதும் காவல்துறை அவ்வப்போது ரைடு நடத்தி சாராய உற்பத்தி செய்பவர்களை கைது செய்வதும் சாராய ஊறல்களை அழிப்பதும் நடந்துவருகிறது.
இந்த நிலையில் கீழ்குப்பம், சின்னசேலம் காவல் நிலைய பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், நடத்திய ரகசிய விசாரணையில் கீழ்குப்பம் காவல் நிலைய காவலர் சண்முகம் என்பவர் ஒரு சாராய வியாபாரியிடம் மாமுல் பணம் கேட்டு நேரம் பேசும் ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், கள்ளக்குறிச்சிக்கும், ஆறுமுகம் என்பவரை உளுந்தூர்பேட்டைக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் கச்சராபாளையத்திற்கும், ராஜேந்திரன் என்பவரை கள்ளக்குறிச்சிக்கும், கோவிந்தராஜ் என்பவரை திருநாவலூருக்கும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதேபோல் சின்னசேலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்கும், தேவமூர்த்தி தேவேந்திரன் காவலர் ராபர்ட் ஜான் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்டு காவலர் பேரம் பேசிய சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.