முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன் வைத்தனர்.
இதனிடையே, பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், " பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது பற்றி நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருந்தது. பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் இன்று காலை வருகை புரிந்த நிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு, ''பேரறிவாளன் சிறையில் நிறைய டிகிரி படித்துள்ளார். அதிகாரிகளுடன் நன்னடத்தையாக இருந்துள்ளார். இதையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசு எடுத்த முடிவை கவர்னர் இப்படி கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதனால் ஆளுநர் பதவியை அவர் மிஸ் யூஸ் செய்கிறாரா? என்ற கோணத்திலும் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது'' என்றார். அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர்கள் பேரறிவாளன் போன்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் இதேபோல் விடுதலை சாத்தியமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ''எல்லோருக்கும் இது பொருந்தும். இவர் பெயிலில் இருப்பதால் அப்படியே ரிலீஸ் செய்துவிட்டார்கள். இவருடைய பெட்டிசன்ஸ் 2016- ல் இருந்து இங்கு பெண்டிங்கில் உள்ளதால் மற்றவர்களுக்கும் இதையே பின்பற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.