மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பெருநகர சென்னை மாநகராட்சி.
அதன்படி, சமைத்தவுடன் உணவை சூடான நிலையிலேயே சாப்பிட வேண்டும். 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்துக் குடிநீரைக் குடிக்க வேண்டும். வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகள் என வகைப்பிரிக்க வேண்டும். அடிக்கடி 20 நொடிகள் முறையாக சோப்பை உபயோகப்படுத்திக் கைகளை கழுவ வேண்டும். பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த வேண்டும். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டால், உப்பு ,சர்க்கரை கரைசல், வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். குப்பைகளை வகைப்பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க சுற்றுப்புறத்தில் நீர் தேங்கக்கூடிய தேவையற்றப் பொருட்களை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.