கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலையத்தில் அருகில் உள்ள அக்கரை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(33). இவர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கௌரி(30). இவர்களுக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என இரு குழந்தைகள் உள்ளனர்.
இதில் தருண் ஆதித்யா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி நள்ளிரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஆதித்யா விடிந்ததும் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், எஸ்.பி செல்வகுமார் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி திருமேனி, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவனை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த14ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தை தங்களிடம் உள்ளது என்றும், குழந்தை உயிரோடு வேண்டுமானால் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். உடனடியாக சிறுவனின் பெற்றோர், காவல் துறையை தொடர்பு கொண்டனர்.
இது குறித்த தகவல் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போன் எண்ணை கண்காணிக்க தொடங்கினர். அதேபோல், நேற்று முன் தினம் காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டு மிரட்டினர். அந்த அழைப்பினை இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் சோதனை செய்ததார். அதில், மர்மநபர்கள் பங்காரம் கிராம பகுதியில் இருந்து பேசியதை கண்டறிந்தனர்.
உடனடியாக போலீசார், பங்காரம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் படியாக ஒரு மகேந்திரா ஜீப் வந்து கொண்டிருந்தது. அந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் சிறுவன் தருண் ஆதித்யா இருந்தது தெரியவந்தது. உடனே காரில் இருந்த சுந்தர சோழன், அருள், செல்வம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில், பணத்துக்காக சிறுவனை கடத்தியது தெரியவந்தது. மேலும், இந்தக் கடத்தலுக்கு சகாதேவன் என்பவரின் மகன் ரகுபதி என்பது தெரியவந்தது. இதில் சுந்தர சோழன் என்பவர் கடத்தப்பட்ட சிறுவனின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். சிறுவன் மாயமான வழக்கில் திறமையாக செயல்பட்ட அனைத்து காவல்துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.