கடந்த 14 ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''இந்த திரைத்துறையில் 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நானும் பயணித்திருக்கிறேன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 15 படங்களை நேரடியாக தயாரித்து இருக்கிறேன். 15 படங்கள் நடித்திருக்கிறேன். நல்ல நல்ல படங்களை டிஸ்ட்ரிபியூட் பண்ணி இருக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் சொத்து மதிப்பு 2,000 கோடி என்று சொல்லிட்டாரு. இருக்குற எல்லா ப்ரொடியூசர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். அது பற்றி நான் பேச விரும்பல. ஒரு தயாரிப்பாளருக்கு இன்னொரு தயாரிப்பாளர் கூட கஷ்டம் என்னன்னு தெரியும். எனவே உங்களுக்கு ரெட் ஜெயன்ட் வேல்யூ என்னன்னு தெரியும். போறப்போக்குல அடிச்சிவிட்டு போக வேண்டியதுதானே.
ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சி உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியையும், உலக அளவிலான அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறேன். இந்திய சினிமாவின் மொத்த வருவாயில் பாதிக்கு பாதி தென்னிந்திய சினிமா ஈட்டி வருகிறது. இது மகிழ்ச்சியைத் தருகிறது. சினிமா துறையினுடைய இந்த வளர்ச்சி மீண்டும் பெருக வேண்டும். அதற்கு பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். சினிமா துறையில் எப்பொழுதுமே ஒற்றுமை இருக்காது. அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் துறை நன்றாக இருந்தால் தான் அதை நம்பி இருக்கும் குடும்பங்கள் நன்றாக இருக்கும்'' என்றார்.