தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் பாதிப்பு பகுதிகளை இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாகச் சென்னை சாந்தோம் பகுதியில் அதிகபட்சமாக 23 செ. மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்துக்கு நாளை மறுநாள் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 11ம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்கும், இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனால் வரும் 10 மற்றும் 11ம் தேதி தமிழகம் முழுவதும் தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலார்ட் என்பது அரசு நிர்வாகம், மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைவாக எடுக்கும் பொருட்டு வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.