உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்துள்ளது. இதற்காக மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் தற்போது என்.ஐ.ஏ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஆறு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். மருத்துவர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய ஆறு நபர்களை போலீசார் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஆவணங்கள் அனைத்தும் தற்பொழுது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.