


இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது சமாதியில் விசிக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியளார்களிடம் அவர் கூறும்போது, “உரிமைகளுக்காக விடுதலைக்காக டாக்டர் அம்பேத்கர் போராடியபோது அவரோடு தோளோடு தோளாக உடனிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்.
இன்னும் குறிப்பாக அன்றைய இறுக்கமிகு சூழ்நிலையிலேயே மிகப் பெரிய அளவிலே கல்வியறிவைப் பெற்று, தான் பெற்றிருந்த அந்தக் கல்வியறிவை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தியவர் இரட்டைமலை சீனிவாசன். அவருடைய 76வது நினைவு நாளான இன்று (18.09.2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருடைய நினைவிடம் அமைந்திருக்கும் இந்த உரிமைக் களத்திற்கு வந்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். மேலும் பலரும் கலந்துகொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செய்துள்ளோம்” என தெரிவித்தார்.