ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் இடைத்தரகர் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா என்கிற அமுதவல்லி (50), குழந்தைகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இதுவரை அமுதவல்லி மட்டுமின்றி அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் உள்பட 8 பேர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு ராசிபுரம் காவல்துறையினரிடம் இருந்து சேலம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அமுதவல்லி மற்றும் இடைத்தரகர்கள் முருகேசன், பர்வீன், லீலா, செல்வி உள்ளிட்டோரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. பர்வீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் உடந்தையாக இருந்ததாக சேலம் சர்க்கார் கொல்லபட்டி கிராம செவிலியர் சாந்தி என்பவரை கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ரேகா (40) என்ற பெண் இடைத்தரகர் ஒருவரும் அமுதவல்லியிடம் சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி, பெங்களூருவில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவலர்கள், பெங்களூருவுக்கு விரைந்து சென்று ரேகாவை மே 17ல் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, சனிக்கிழமை (மே 18) நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். ரேகாவை வரும் 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்ட விரோத குழந்தைகள் விற்பனை வழக்கில் ரேகாவுடன் சேர்த்து கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.