கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களைப் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்வதோடு வழக்குப்பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர் காவல்துறையினர். மேலும் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் சிப்காட் காவல்நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சிப்காட் அரசு குடியிருப்பு பகுதியில் சில இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்துள்ளனர்.
அவர்களை பார்த்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரிக்க கூப்பிட அந்த கும்பலில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர். அதில் மூன்று பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, மோட்டூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த யுவராஜ், பல்லவநகர் வாசு, திருவலம் அரவிந்தன் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பைக்கில் சென்று செயின் திருடுபவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் சிப்காட்டை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செயின் பறித்ததும் தாங்கள்தான் என கூறியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர்களே, கடந்த ஆண்டு தொழில் போட்டி காரணமாக சக தொழில் கூட்டாளிகளான சென்னை ஆசிப், விழுப்புரம் தெளிகிராமம் நவீன், சூர்யா ஆகிய 3 இளைஞர்களை கொலை செய்து, பொன்னையாற்றில் புதைத்தாக கூறுகிறார்கள், அந்த இடத்தையும் போலீசாரிடம் அடையாளம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இடம் வேலூர் மாவட்ட எல்லைக்குள் வருவதால், இதுபற்றி அந்த மாவட்ட காவல்துறைக்கு தகவல் கூறப்பட்டதாகவும், காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மூன்று பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.