புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் (15.09.2021) வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக அதிமுக கூட்டணியின் முக்கிய கட்சியான பாமக, கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காணொளி காட்சி மூலம் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "கடந்த தேர்தல்களில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாததால் தொண்டர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. சொந்த கட்சிக்காரர்ரகளைக் கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் நாம் வெற்றிபெற முடியுமா? நம்மால் அவர்கள் பலனடைகிறார்கள், அவர்களால் எந்தப் பலனும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனித்து நின்று நம் பலத்தை இந்த முறை நிரூபிப்போம்" என்றார்.