உள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனையில் கைப்பற்றப்பட, அதனைப் பதுக்கிய ஒப்பந்தகாரர் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ளது ஒப்பந்தகாரர் தர்மலிங்கத்தின் வீடு. இந்த வீட்டில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டிற்காக மக்களிடம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக ரொக்கமும், பெட்டியாய் மதுபானப் பாட்டில்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட 94899- 19722 என்ற எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜமால் முஹம்மது தலைமையிலான குழுவினருடன் இணைந்து சோதனையிட்டுள்ளது காவல்துறை. இதில் ரூ. 38 லட்சத்து 63 ஆயிரத்து 700 ரொக்கமும், 1192 குவாட்டர் அளவிலான மதுபானப் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து எதற்காக இந்த பணம்..? மதுப்பாட்டில்கள்..? என ஒப்பந்தகாரர் தர்மலிங்கத்திடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் பறக்கும் படை அதிகாரிகள்.
விசாரணையில் சிக்கிய தர்மலிங்கத்தின் மனைவி ராணியம்மாள் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டல மாணிக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், அவரது மகன் பாலு அதே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.