இறந்தவரின் உடல் வேறொரு இடத்திலிருக்கின்றது. அதனைக் கொண்டு வரவேண்டுமென நடித்து இ- பாஸ் பெற்று போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்திய சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்புடைய ஒன்பது நபர்களைப் பொறி வைத்து பிடித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டப் போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல் துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருமளவில் கள்ளக்கடத்தல் நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அறிமுகப்படுத்தியிருந்த பிரத்யேக எண்ணிற்குத் தகவல் வர, திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்பிரிவு போலீஸார் எட்டு போலீஸ் குழுக்களாகப் பிரித்து அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனடிப்படையில் திருவாடனை கிழக்குக்கடற்கரை சாலையிலுள்ள வீரசங்கிலி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் செம்மரக்கட்டைகளைக் கைப்பற்றிய போலீசார், கட்டைகளைப் பதுக்கிய இருவரைக் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் கடத்தலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பவுடர்கள், போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண பேஸ்ட் உள்ளிட்டவைகளையும், கடத்தலுக்குப் பயன்பட்ட கார் ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சுமார் 20- க்கும் மேற்பட்ட செல்பேசிகள், லட்சக்கணக்கான பணம், போதைப் பொருட்களை எடை பார்க்கும் இயந்திரம், அதை பேக்கிங் செய்யும் இயந்திரம் என அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பத்திரிகையாளர் உட்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"ஊரடங்குக் காலத்தில் இறந்தவரின் உடலைக் கொண்டு வருவதாகக் கூறி இ- பாஸ் எனப்படும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையிலான அனுமதி சீட்டினையும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அனுமதி சீட்டினையும் பத்திரிகையாளர் போர்வையில் குறுக்கு வழியில் பெற்று, அதனைக் கொண்டு கோவாவில் இருந்து பெங்களூருக்கும், அங்கிருந்து கோவை, மதுரை வழியாக ராமநாதபுரம் வந்தும் போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்தி வந்துள்ளனர்.
கடத்தப்பட்ட பொருட்களை நாட்டுப்படகுகள் மூலம் திருவாடனையிலிருந்து தொண்டி வழியாக கடல் மார்க்கமாக இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவிருந்த நிலையில் பிடிப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட சரக்குகளின் மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 5 கோடிக்கும் மிகாமல் இருக்கும், இந்த விசாரணையின் இறுதியில் சில முக்கிய பிரமுகர்கள், இ- பாஸ் கொடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
மாவட்ட எஸ்.பி.வருண்குமாரோ, "குறுக்கு வழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போல் யாரும் ஈடுபட வேண்டாமென" அறிவுறுத்தினார்.
இந்தப் போதைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஆளுங்கட்சி ஆதரவான தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளரின் சேவையைப் பாராட்டி குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.