கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மக்களுக்காகக் களத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று வெகுவேகமாகப் பரவி வரும் நிலையில், அச்சத்தில் உறைந்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்ட மக்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனா வூஹான் மாநிலத்தில் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி வருகிறது. கோவிட் 19 எனப்படும் கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சில துறையினருக்கும் மட்டும் விலக்கு அளித்து நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது இந்தியா. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 38 மாவட்டங்களிலும் கரோனா பாசிட்டிவ் தொற்று பதிவாக, 12 மாவட்டங்கள் மட்டும் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தினைப் பொறுத்தவரை முதற்கட்டத்தில் கீழக்கரை, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் ஒன்றிரண்டு தொற்றாகக் கண்டறியப்பட்டு நான்கு நாட்களுக்கு முன்பு வரை மொத்தம் 15 கரோனா பாசிட்டிவ் தொற்றுகள் கண்டறியப்பட்டு அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் முதலில் 10 நபர்கள் குணமாகி வீடு திரும்பிய நிலையில், உச்சிப்புளிப் பகுதியில் பணியாற்றி வந்த 33 வயது பெண் டெங்கு தடுப்புப் பணியாளர், ராமநாதபுரத்தில் காவல்துறையில் பணியாற்றி வந்த 30 வயது ஆண் மற்றும் பனைக்குளம் சோகையன் தோப்பினை சேர்ந்த 29 வயது தீயணைப்பு படைவீரர் ஒருவர் என ஒரே நாளில் களத்தில் பணியாற்றும் மூன்று அரசு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்த, அவர்கள் வசித்த பகுதிகள், அவர்களுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனை வளையத்திற்குள் வந்தனர்.
இந்நிலையில், இன்று ஆர்எஸ் மங்கலம் பகுதியிலுள்ள தீயணைப்புப் படைவீரர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆகவும், சிகிச்சையினால் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே களத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்த, அச்சத்தில் உறைந்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்து மக்கள். இதனால் இம்மாவட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.