ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/w5LyHRdf_pwlt7rkNY5mSWdf6QVCYkqY9r1EE_ssQAY/1566297227/sites/default/files/inline-images/samanatheerthangar.jpg)
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, திருவாடானை துணை வட்டாட்சியர் சி.ஆண்டி ஆகியோர் கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது, அவ்வூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் உடைந்த நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்தனர்.
இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது: ‘’ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ளது. முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோகமரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோகமரத்தின் கிளைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்கவேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/G_06diFSNjRiH45yk18m802Yuh1I6bp3n7CxgJA2GN4/1566297248/sites/default/files/inline-images/samanatheerthangar1.jpg)
தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின் சிற்பங்கள் இருக்கும். இதில் பிரபாவளியின் வலப்பக்கத்தில் இயக்கனின் தலை மட்டும் உள்ளது. இடதுபக்கம் இருந்த இயக்கன் சிற்பமும் தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம். மேலும் இதன் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டாக கருதலாம்.
இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான ஐயனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சிக் காலத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் தீர்த்தங்கரரின் சிற்பம் உடைக்கப்பட்டிருக்கலாம்.
திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இது போன்ற சமணத் தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தலை இல்லாதவை. இதில் பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற ஐயனார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.