Skip to main content

சில அம்சங்கள் வரவேற்கத்தக்கது: பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம்: பட்ஜெட் குறித்து ராமதாஸ்

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
ops



தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது  உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மீதமுள்ள அறிவிப்புகள் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.
 

தமிழக அரசுக்கான நிதிநிலை அறிக்கையில் உழவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்படும் என்பது தான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.8916 கோடியிலிருந்து  ரூ.10,559 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதைத் தவிர உழவர்கள் நலனுக்காக வேறு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி, மூலதன மானியத் திட்டம், கொள்முதல் விலை உயர்வு  உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்த்த உழவர்களுக்கு அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமாகவே உள்ளன.

 

ramadoss


அதேநேரத்தில், 55 ஆண்டுகளாக உழவர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்வடிவம் பெறக்கூடும். தமிழ்நாட்டில் உழவுத் தொழிலை மேம்படுத்த இன்னும் 40&க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ள  நிலையில், அதற்கான பாசனப் பெருந்திட்டத்தை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
 

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காகவும் சிறப்பாக எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது பொறியியல் மாணவர்களின் வேலைக்கு செல்லும் திறனை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்த பயிற்சிகளால் எந்த பயனுமில்லை.
 

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது மின்னுற்பத்திக்கு உதவும் திட்டம் போன்று தோன்றினாலும், குப்பைகள் எரிக்கப்படும் போது சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். அதேபோல், சென்னையில் 2 லட்சம் வாகனங்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம் அந்தப் பகுதிகளில் நெரிசலை அதிகரிக்கவே வழிவகுக்கும். மாறாக, நெரிசல் அதிகமுள்ள பகுதிகளை தனியார் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதே பயனளிக்கும்.
 

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும்,  சென்னை மெட்ரோ தொடர்வண்டி சேவை வண்டலூர் வரை நீட்டிக்கப்படும் என்பதும்  வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். இவை போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றுவது மட்டுமின்றி,  போக்குவரத்து சார்ந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் இரு ஆண்டுகளில் 1000 மதுக்கடைகளை மூடப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கையை மட்டும் அரசு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த புள்ளிவிவரங்களால் மக்களுக்கு பயனில்லை.
 

தமிழகத்திலுள்ள நிலங்களை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் நிலப்பயன்பாட்டுக் கொள்கை வகுக்கப்படும், மாநிலம் முழுவதும் திட்டமிட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டை மொத்தம் 9 நிலையான மண்டலங்களாகப் பிரித்து அவற்றுக்கான மண்டலத்திட்டங்கள் வகுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை ஆகும். எனினும், 9 நிலையான மண்டலங்கள் வீட்டு வசதிக்காகவும், நிலப்பயன்பாட்டுக்காகவும் மட்டுமே வகுக்கப்படுவதாக தெரிகிறது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி தமிழகத்தை பல்வேறு பொருளாதார மண்டலங்களாக பிரித்தால் தொழில் வளர்ச்சியையும், அதன் மூலம் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.
 

தமிழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதும் கவலையளிக்கிறது. தமிழகத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான  சொந்த வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட  ரூ.1438 கோடி சரிந்து ரூ.1,10,178 கோடியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாகவும்,  அரசின் நேரடிக் கடன் சுமை ரூ.3,97,495 கோடியாகவும் அதிகரித்துள்ளன. தமிழக அரசின் நேரடிக் கடனுக்கான வட்டி மட்டும் ரூ.33,226 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான அறிகுறிகளாக இவை தென்படவில்லை.
 

மொத்தத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது  உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.