அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்கு தடை! - ஐகோர்ட்
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக தொண்டர்கள் தர்மபுரி தேர்தல் அதிகாரி குணசேகரனை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவரை தகாத வார்த்தையில் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் மீது கொலைமிரட்டல், அனுமதியின்றி கூட்டத்தை திரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர்மபுரி டவுன் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
- சி.ஜீவா பாரதி