![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/fgTuWi092vZlrvEt4l0gOEQ_lgMStCYyXyl4ypb5j3Q/1579515062/sites/default/files/inline-images/ra1_0.jpg)
சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, தந்தை பெரியார் ராமன் சீதை உருவங்களை நிர்வாணமாக கொண்டுவந்து செருப்பால் அடித்தார் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் இவ்வாறு பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படவுள்ளது என தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கி.வீரமணி. அப்போது அவரிடம், ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதும், ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் என்ன நிலை எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் ’’ என்றார்.