பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக புத்தகம் எழுதியவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான மாரிதாஸ் என்பவர், நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ராகவன் வெளியிட்டார்.
இந்நிலையில், மோடி குறித்து தான் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னதாக நேற்று, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து ’நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற புத்தகத்தை அவரிடம் காட்டி, வாழ்த்து பெற்றுள்ளார்.
ரஜினியுடனான இந்த சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதை மாரிதாஸ் இன்று தன் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், நான் ஆர்.எஸ்.எஸ் காரனும் இல்ல.. பிஜேபி காரனும் இல்ல.. ரஜினியை சந்திக்க 15 நிமிடம் நேரம் கிடைத்தது. நான் எழுதிய புத்தகத்தை காட்டி அவரிடம் ஆசிபெற்றேன்.
அவர் கட்சி கொள்கை குறித்து திட்டம் தீட்டும் வேலையில் இருக்கிறார். அவரை சந்திக்க கிடைத்த அந்த நேரத்தில், அவரிடம் கல்வி கொள்கைகள் குறித்து ஆலோசனை தெரிவித்து வந்தேன் என அவர் கூறியுள்ளார்.