கலைஞரைவிட 27 வயது இளையவர் ரஜினிகாந்த். ஆனாலும், எந்த மேடையிலும், கலைஞரை ‘நண்பர்’ என்றே குறிப்பிடுவார். அரசியல் சாணக்கியர் என்றும் சொல்லத் தவறமாட்டார். கலைஞரும் அப்படித்தான். சூப்பர் ஸ்டார் என்று ரஜினியை மேடைகளில் பெருமைப்படுத்துவார். உடல் மிகவும் நலிவுற்று, கலைஞர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், துணை ஜனாதிபதியிலிருந்து முதலமைச்சர் வரை, காவேரி மருத்துவமனை சென்று பார்க்கிறார்கள். கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி போன்றோரிடம், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தும் வருகிறார்கள். திமுக தொண்டர்களோ, காவேரி மருத்துவமனையே கதி என்று கிடக்கிறார்கள். வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.
டேராடூனில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாம் ஷெட்யூல் படப்பிடிப்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையிலும் கலந்துகொண்டு, அவர் நடிக்க வேண்டியது இருக்கிறது. அதனால், தான் பெரிதும் மதிக்கின்ற நண்பர் கலைஞரை, நேரில் வந்து பார்க்க முடியாத நிலையில் பரிதவித்து வந்தார் ரஜினி. ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து, டேராடூனில் இருந்து கிளம்புகிறார். நாளை சென்னை வந்தடையும் ரஜினி, காவேரி மருத்துவமனை சென்று, கலைஞரை நேரில் சந்தித்து, நலம் விசாரிக்கிறார்.