தேனி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இடைக்கால நிர்வாகக்குழுவின் ஒன்றியத்தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வுசெய்யப்பட்டு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆணையை ஓ.ராஜாவிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அதோடு துணைத் தலைவராக, செல்லமுத்து பதவியேற்றார். உடன், நிர்வாகக் குழு இயக்குநர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
அதன் பின்னர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "தேனி ஆவின் இடைக்காலத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார். தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலின் அறிவுரைப்படி, ஆவின் ஆணையர் உத்தரவுப்படிதான் ஓ.ராஜா பதவியேற்றுள்ளார். இதுவரை ஆவின் ஒன்றியத்தலைவர் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொண்டதில்லை. எங்கள் ஊர் ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவிற்குக்கூட நான் போகவில்லை. ஆனால், நேற்று இரவு ஓ.ராஜாவின் அன்புக் கட்டளையை ஏற்று இங்கே வந்துள்ளேன்.
பத்துப் பதினைந்து நாளில், தேனி ஆவினில் முறைப்படி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. தமிழக-கேரள மாநிலத்தை இணைக்கும் மாவட்டம் தேனி இங்கே, பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. சரியான தலைவர் இருந்தால், பால் கொள்முதல் மற்றும் விற்பனையைக் கூட்டலாம் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். தற்போது ஓ.ராஜா பொறுப்பில் வந்துள்ளார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உள்ள குடும்பம் ஓ.பி.எஸ் குடும்பம். இன்று நடப்பது எடப்பாடி - ஓ.பி.எஸ் ஆட்சி. இது ஒரு ஆன்மிக ஆட்சி" என்று கூறினார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "ஓ.ராஜா பதவியேற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் தெரிவித்த விதிகளின்படி அவர் பதவியேற்றுள்ளார். கம்பத்தில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரைத் தாக்க வந்தவர்களை, எங்களால் தடுக்கவும் தெரியும், அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும். சமுதாயப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதிகாத்தோம்.
பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் கட்சி, திமுக. மக்களிடையே மதவெறியைத் தூண்டி அரசியல் செய்துவருகிறது திமுக. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக மற்றும் காங்கிரஸ்தான்" என்றார். இந்த பேட்டியின் போது மாவட்ட துணை செயலாளர் முறுக் கோடை ராமர் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.