பண மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 3 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடியான நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறை தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை தேடிவருகிறது. டிசம்பர் 17ஆம் தேதி முதல் தனிப்படை காவல்துறையினர், பெங்களூரு, கேரளா, கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சொந்தமான ஆறு வங்கிக் கணக்குகளைக் காவல்துறை முடக்கியுள்ளது.
சுமார் 8 தனிப்படை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.