சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் விற்பனையை தமிழக அரசு துவங்கியிருக்கிறது.
திரவ உணவை பதப்படும் முறையான அல்ட்ரா பேஸ்காரி யாக்கம் முறையில், பாலை கொதிக்க வைத்து பதப்படுத்தி ஒரு லிட்டர் அளவில் பேக் செய்து வெளிநாடுகளுக்கு ஆவின் சப்ளை செய்து வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும் பால் குறைந்தது 6 மாதங்கள் வரை கெடாது. இந்தப் பாலை குளிர்சாதனப் பெட்டியில் அடைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அடைக்கப்பட்டு அனுப்பப்படும் ஆவின் பாலானது வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற பிரபல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கத்தார் நாட்டில் ஆவின் விற்பனையைத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்துப் பேசியபோது "சென்னையில் நடந்த 2-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல கோடி முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது. எளிய முறையில் சாதாரணமாக அணுகக்கூடிய ஒரு முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். கத்தார் நாட்டு மக்கள் ஒரு சுவையான பாலை அருந்த வேண்டும் என்று இந்த நாட்டின் மன்னரின் அனுமதியை பெற்று எங்களது ஆவின் பால் வி்ற்பனையைத் தொடங்கியுள்ளோம்.
தமிழா்கள் எந்த நாட்டோடும் இணைந்து செயல்படக்கூடியவர்கள். இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங் உட்பட எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு தமிழா்கள் உறுதுணையாக இருந்து பாடுபடுவார்கள். கத்தார் நாட்டில் ஒருதமிழர் வீட்டில் நான் சாப்பிட்டது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். நம்முடைய ஊர் இட்லி, பொங்கல், உளுந்த வடை கடல் கடந்து கிடைக்கின்றது என்று சொன்னால் பெருமையாக உள்ளது. இனி ஆவின்பால் உலகத்தை சுற்றி வரும். அதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.
ஆவின் அசத்துகிறது!