ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வனராஜ் மீது 353 மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது ராஜபாளையம் வடக்கு காவல்நிலையம்.
கடமையாற்றவிடாமல் தடுக்கப்பட்ட, கொலை மிரட்டலுக்கு ஆளான பொது ஊழியர் யார்? என்ன நடந்தது?
ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிகிறார் ராமர். இவரிடம் அச்சங்கத்தின் தலைவர் வனராஜ், “என்னுடைய கார் டிரைவருக்கு சம்பளம் போட்டுக் கொடுக்கணும்..” எனக் கூறியிருக்கிறார். அதற்கு ராமர் “என்னால் உங்க டிரைவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது.” என்று மறுத்திருக்கிறார். ஏனென்றால், இச்சங்கத்தில் தலைவரால் முறையற்ற பணி நியமனம் செய்யப்பட்ட 25 வவுச்சர் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனாலேயே, டிரைவருக்கு சம்பளம் வழங்கும் தகுதி தனக்கில்லை என்று வனராஜுவிடம் நிலைமையை விளக்கியிருக்கிறார். ராமர் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாத வனராஜ், “சங்க நிர்வாகத்தில் நீங்க தலையிட்டால், ஆளை வச்சு கொன்னுருவேன். உன் பொண்டாட்டி புள்ளைங்க தெருவுல நிற்கும். ஜாக்கிரதை..” என்று மிரட்டியிருக்கிறார்.
கொலை மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான ராமர், உயிர் பயத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.